யூடிஆர் கிராமநத்தம் புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்

UDR பட்டாவில் தவறான நபர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா ??

பிற பங்காளிகள் பெயர் கூட்டுபட்டாவில் இல்லையா !

பட்டாதாரர் தந்தை பெயர் பிழையாக இருக்கிறது, எழுத்து பெயர் பிழையாக இருக்கிறதா ?

UDR க்கு முன்பே எங்களிடம் பட்டா இருக்கிறது. ஆனால் எங்கள் பெயர் ஏறவில்லையா ?

இடத்தின் பரப்பளவு கூடுதலாக / குறைவாக UDR ல் உள்ளதா?

சர்வே எண்கள் / உட்பிரிவுகள் தவறுதலாக உள்ளதா?

நிலத்தின் வகை புஞ்சையிலிருந்து நஞ்சை ஆகிவிட்டது, புன்செய் கிராம நத்தம் ஆகிவிட்டது, அதே போல் நன்செய் – புன்செய் ஆகிவிட்டது. நத்தம் புன்செய் ஆகிவிட்டது போன்ற தவறுகள் உள்ளதா ?

கிராம நத்த சர்வேயின் போது எங்கள் இடத்தை அனாதீனம் ஆக்கி விட்டனர் , புறம்போக்கு என்று வகைபடுத்திவிட்டனரா ?

கிராம நத்த ஆவணங்களில் நாங்கள் அனுபவிக்கும் வீட்டை பக்கத்து வீட்டுகாரர் பெயரில் ஏற்றிவிட்டனரா ?

கிராம நத்த நிலத்தில் பத்திரத்தில் 10சென்ட் இருக்கிறது, ஆனால் தோரயபட்டா 5 சென்ட் தான் கொடுத்து உள்ளதா?

கிராம நத்த ஆவணங்களில் கூட்டு பட்டாவில் என்னுடைய பங்காளிகள் பெயர் இருக்கிறது. என் பெயர் இல்லையா?

கிராம நத்தம் / புன்செய்யாக மாற்றிவிட்டனர். – UDR க்கு மாற்றி விட்டார்கள்.

கிராம நத்த FMB யில் அளவுகள் தவறு, உட்பிரிவு எண்கள் தவறு.

கிராம நத்த FMB யில் புதிதாக வழி ஏற்படுத்தி விட்டார்கள், (அல்லது) வழியை எடுத்துவிட்டார்கள்.

UDR FMB யில் சர்வே எண்  உட்பிரிவு தவறுதலாக உள்ளதா ?

UDR – FMB யில் உள்ள பரப்பு அளவுகள், A.பதிவேட்டுடன் ஒத்து போகவில்லை.FMB யில் குளம் , குட்டை, கிணறு, சின்னங்கள், தவறுதலாக மார்க் செய்யப்பட்டு இருக்கிறததா ?

இப்படி பல பிரச்சினைகளுக்கு இளைய தலைமுறையினர் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் படையெடுத்து வருகின்றனர் . சென்ற தலைமுறை வரை நிலத்தின் விலை இவ்வளவு ஏறவில்லை. இடத்தின் விலை கூட, கூட மக்களின் பேராசையும் கூடிவிட்டது.

தற்போது இடம் வைத்து இருப்பவர் ஏதாவது சட்ட ஓட்டை தனது சொத்தில் வைத்து இருந்தால் அதனை எப்படி பயன்படுத்தி பணம் பார்ப்பது என்ற சிந்தனை.மேலும் பட்டா , பத்திரபதிவு, ஆன்லைன் என ஆவண நடைமுறைகள் இறுக்கப்பட்டு கொண்டே வருவதால் பிழையான ஆவணங்கள் வைத்து இருந்தால் நிலங்களை பட்டா மாற்ற முடியவில்லை! கடன் கிடைக்க வில்லை, வீடுகட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால், வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி படையெடுத்து சரி செய்ய முயலுகிறார்கள்.

UDR / கிராம நத்தம்/ FMB யில் திருத்தங்கள் செய்ய என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று என் கள அலுவலகத்தில் கூறுகிறேன். நிச்சயம் இளைய தலைமுறையினர் பயன் பெறுவர்.

மேலே சொன்ன எல்லா சிக்கல்களும் , தீர்வு கிடைக்க செய்ய வேண்டியவைமுதலில் உங்களுக்கு என்ன வகையான சிக்கல் என்பதை தெளிவாக புரிந்து கொள வேண்டும். தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் விவரங்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிரச்சினையை தெரிந்து கொண்டாலே பாதி தீர்வு கிடைத்து விடுகிறது.

அதற்கு தங்கள் தரப்புக்கு ஆதரவான , உறுதுணையாக இருக்க கூடிய கிரைய பத்திரங்கள், மேனுவல் EC கம்ப்யூட்டர் EC க்கள் , பழைய பட்டா, புதிய பட்டா, அ- பதிவேடு, FMB மற்றும் இதர ஆவணங்களை ஆகியவற்றை தேடி எடுத்து மேற்படி ஆவணங்கள் நம் கோரிக்கைக்கு துணை போகின்றனவா என்று ஆராய்தல் வேண்டும்.

நம் பிரச்சினை என்னவோ அதனை அரசு தரப்பு நிர்வாக பார்வையில் இருந்து மனு எழுதுதல் வேண்டும். பெரும்பாலும் பலர் தங்கள் கோணத்தில் இருந்து எழுதுகின்றனர். சிலர் புரியும்படி எழுதுவதில்லை,சிலர் படிக்கமுடியாத படிக்கு பக்கம் பக்கமாக எழுதுகின்றனர்.சிலர் கூறியது கூறல் , சிலர்ஆதாரமற்ற சந்தேகங்களை புகார்களாக வைக்கின்றனர் இதனால் குழப்பங்களும், நேர விரயங்களும் தான் நடக்கிறது.

மனுவில் இருக்கும் DRAFT மிக மிக முக்கியமானது. அவை மிக தெளிவாகவும், குழப்பம் இல்லாமலும் உயர் அதிகாரிகள் நிமிட நேரங்களில் புரிந்து கொள்ள கூடிய வகையில் சுருக்கமாக தெளிவாக மனு எழுதப்பட வேண்டும்.

மேற்படி மனுவுடன் ஆதாரங்கள் இணைத்து மாவட்ட வருவாய் அலுவலருக்கு பதிவு தபால் அனுப்ப வேண்டும். நேரிடையாக சென்று கொடுத்தால் அத்தாட்சி பெறுதல் விதிகளின்படி அரசு அலுவலகத்தில் இருந்து அத்தாட்சி பெற வேண்டும். உங்கள் மனுவில் பணியாளர் நிர்வாக சீர்திருத்தம் சட்ட ஆணை 114 , 66, 89 கீழ் அத்தாட்சி கொடுக்கும் படி கேட்டுகொள்கிறேன் என்று மனுவில் எழுதி இருக்க வேண்டும்.

மனுவை பெரும்பாலும் நேரில் கொடுப்பதை விட பதிவு தபாலில் அனுப்பி வைத்துவிட்டு போஸ்டல் அக்னாலஜிமென்ட் பெறுவதே நமக்கும், அரசு எந்திரத்திறக்கும் உள்ள எளிமையான வழி .

பதிவு தபால் அத்தாச்சி வந்தவுடன் RDO அலுவலகம் நேரிடையாக சென்று தபால் பிரிவில் இருப்பவரிடம் என் மனு வந்தாயிற்றா? அதற்கு வரிசை எண் கொடுக்கப்பட்டு உரிய டேபிளுக்கு நகர்ந்து இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். தேவைபட்டால் RDO வை நேரிடையாக சந்திக்க வேண்டும்.

மேற்படி மனு வட்டாசியருக்கு RDO அலுவலகத்தில் இருந்து FORWARD செய்யப்படும் , அதற்கான இன்னொரு நகல் கடிதம் நமக்கு வந்து சேரும் , அந்த கடிதம் கிடைத்தவுடன் தாங்கள் வட்டாட்சியர் அலுவலகம் நேரிடையாக சென்று அங்கு இருக்கும் தபால் பிரிவை உங்கள் பெட்டிசன் எண் ஆகிவிட்டதா என்றும், அது சம்பந்தப்பட்ட டேபிளுக்கு நகர்ந்து விட்டதா என பார்த்துவிட்டு தேவைபட்டால் துணை வட்டாட்சியர் , வட்டாட்சியரை சந்தித்து விவரங்களை சொல்ல வேண்டும்.

மேற்படி பெட்டிசன் வருவாய் ஆய்வாளருக்கு (RI) FORWARD செய்யப்படும். நாம் அவரை பின் தொடர்ந்து அதனை VAO க்கு வர வைக்க வேண்டும் . VAO வை நேரடியாக சந்தித்து கிராம கணக்கு விவரங்கள் , மற்ற கள விவரங்கள் பற்றி மனுவை ஒட்டி VAO விசாரணை நடத்தி ஆய்வறிக்கை தயார் செய்வர் . அப்பொழுது அவருக்கு தேவையான விவரங்களை நாம் தர வேண்டும்.

மேற்படி VAO ஆய்வறிக்கை மற்றும் மனு RI க்கு மீண்டும் ரிவர்ஸ் ஆகும். அவரை பின் தொடர்ந்தால் அம்மனு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும்.அங்கே பட்டா மேல் முறையீடுகள் டேபிளில் நமது பைல் சென்று விட்டதா என உறுதி செய்யப்பட வேண்டும்.

வட்டாட்சியர் விசாரணைஅழைப்பாணை

UDR விஷயங்கள் , பட்டா மேல் முறையீடு டேபிளுக்கும், FMB சிக்கல்கள் தலைமை சர்வேயருக்கும் , கிராம நத்தம் பிரச்சனைகள் நத்தம் அலுவலகத்திற்கு செல்லும். பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு விசாரணை அழைப்பானை வரும்.

அழைப்பாணையில் குறிப்பிட்டு இருக்கும் தேதியில் தவறாமல் ஆஜராகி விசாரணையில் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளித்து தாங்கள் கொடுத்த பதில்களை ஆவணங்களாக உருவாக்கி உங்களிடம் கையெழுத்து பெற்று மேற்படி ரிப்போர்ட்களை RDO விற்கு அனுப்பி வைப்பார்கள்.

எந்த வித சிக்கலும் பிரச்சினைகளும் ஆட்சேபனைகளும் உங்கள் பிராதுக்களில் இல்லை என்றால் RDO உத்தரவு போட்டு உங்களுக்கு ஏற்ற நிவாரணம் செய்வார் . உங்கள் ஆவணங்கள் RDO உத்தரவு படி சரி செய்யப்படும்.

அதுவே ஆட்சேபனைகளும் சிக்கல்களும் எதிர்ப்புகளும் இருந்தால், மேற்படி மனு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்ற விசாரணையில் வழக்காக்கி பதியப்பட்டு , வழக்கு விசாரணை அடிப்படையில் தங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

மேற்படி வேலைகளுக்கு கூடுதல் ஆவணங்கள் தேவைபட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , சென்னை நில அளவை துறை, நில நிர்வாக துறை போன்ற இடங்களில் ஆவண காப்பகங்களிலும் தேடுதல் நடத்தி ஆவணங்கள் பெற்று RDO கோர்ட்டில் வழக்குகள் நடத்தி வெற்றிபெற வேண்டும்.

மனு கொடுத்து விட்டோம், நிச்சயம் அரசு வேலையை முடித்துவிடும் என்று வேறு வேலை பார்க்க கிளம்ப கூடாது. தொடர்ச்சியான பின் தொடர்தல் இருந்தால் தான் மேற்படி மனு , அரசு எந்திரத்தின் ஒவ்வொரு டேபிளுக்கும் நகரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசு எந்திரம் PROACTIVE ஆக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் நாம் தான் PROACTIVE ஆகவும், GO-GETTER ஆகவும் இருக்க வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு உரிய மரியாதையும், நட்பினையும் வெளிபடுத்த தவறாதீர்கள்.அரசு அதிகாரிகளிடம் எரிச்சல்படுதல், சண்டையிடுதல், லஞ்சம்/ஆதாயம் பெறுகிறார் என பழித்தல், சாதியுணர்வை காட்டுதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டால் எதிர்மறை விளைவுகள் தான் நிச்சயம் வரும்.

2 thoughts on “யூடிஆர் கிராமநத்தம் புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *