வாரிசுச்‌ சான்றிதழ்‌ என்பது என்ன?

வாரிசுச்‌ சான்றிதழ்‌ என்பது என்ன?

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog.)

ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்

வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?

ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இந்தச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.

வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?

நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.

எங்கே விண்ணப்பிப்பது?

வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கிறது.
வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை

1. இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்
2. வாரிசுகளின் இருப்பிடச் சான்றிதழ்

எவ்வளவு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

ஒருவர் இறந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் இறப்பைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உடனடியாக இறப்பைப் பதிவு செய்ய முடியாத நிலையில் அதற்கான காரணத்தைத் தெரிவித்து ஒருவருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் காலம் கடந்திருந்தால் அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே சான்றிதழ் பெறமுடியும்.

ஒருவேளை பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால் அவரின் இறப்புப் பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் இறப்புப் பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழைப் பதிவுத்துறையில் பெற்று நீதிமன்றத்தில் கொடுத்தால் நீதிமன்றம் இறப்புச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிடும்.

விண்ணப்பித்து எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்?

விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் தாமதமாவதற்கான காரணத்தைக் கூற வேண்டும்.

எப்போது மறுக்கப்படும்?

இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருப்பது, தத்து எடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம். நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.

இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)

இறந்த நபரின் பெயரிலுள்ள முதலீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வமான உரிமை இருக்கிறது என்பதைக் காண்பிக்க ஒருவர் நீதிமன்றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.

எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந்த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குகள்/முதலீடுகள் முதலியவற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத்தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழ் வழங்கும்.

ஒருவர் காணாமல் போயிருந்தால்..?

ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர, அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, ‘அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்’ என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *