குடிசை மாற்று வாரிய வீடுகளை வாங்கலாமா தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog)

1) குடிசை வாழ் மக்களுக்கு நல்ல குடியிருப்புகளையும், மேம்படுத்தபட்ட வாழ்க்கைதரத்தையும் அளித்து குடிசை வாழ் மக்களுக்கு மறுவாழ்வும் குடிசைபகுதிகளை மேம்படுத்தி உயர்த்துவதும் தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியத்தின் தலையாய பணி ஆகும்.

2) நடுத்தர அடிதட்டு மக்கள் சென்னையில் ஒரளவுக்கு நாகரீகமாக வாழ முடியும் என்றால் இந்த குடிசை மாற்று வீடுகளே காரணம்.

3) குடிசை மாற்று வாரியம் அடிமனைகளாகவும் வழங்கும் அல்லது அடுக்குமாடி வீடுகள் கட்டி வீடுகளாகவும் வழங்கும்.

4) கே.கே.நகர் எம்ஜிஆர் நகர்,பள்ளிக்கரணை பாலாஜி நகர்,மந்தைவெளி காரை குட்டை ,சின்ன மலை சைதாபேட்டை பகுதிகளில் மனைகளாக ஒதுக்கபட்டதையும்  சென்னை முழுக்க இருக்கும் சேரிகள் குப்பங்கள் தோட்டங்கள் என எல்லா பகுதிகளிலும் மூன்று மாடி 4 மாடி குடியிருப்பு வீடுகள் 200 சதுரடிக்கு கீழே கட்டி குடிசைமாற்று வாரியம் விற்பனை செய்த வீடுகளை பார்க்கலாம்.

5) சென்னை ஓ.எம்ஆரில் துறைப்பாக்கத்தில்  கண்ணகி நகர் குடியிருப்பும் செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு மிகபெரிய குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகள் ஆகும்.

6) இப்படி தமிழகம் முழுக்க பெருநகரங்களில் இருக்கும் அடுக்குமாடி வீடுகளை ஒதுக்கீடுதாரர் இல்லாமல் வெளிநபர் வாங்குவது என்றால் என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டும்

7) குடிசை மாற்று வீடுகள் மற்றும் நிலங்கள் பயனாளிகளுக்கு கொடுக்கும் போது சுத்த கிரயமாகவோ அல்லது நிலவரிதிட்ட சர்வே காலத்தில் நிலத்தை செட்டில்மெண்டு செய்வார்களே அது போல செய்வது இல்லை.

8) ஒப்படைக்கபடும் சொத்து முதலில் குத்தகையாகவும் தவணை முறையில் பணம் செலுத்தி அந்த சொத்தை உரிமை ஆக்குதல் அக்ரிமெண்டு போட்டு தற்காலிகமாக ஒதுக்கீடு மட்டும் செய்து ஆணையை குடிசைமாற்று வாரியம் வழங்கும்.

9) குத்தகை என்றால் நேரடியாக போய் அனுபவத்தில் இருந்து கொள்ளலாம்.அதே சொத்தில் 20 வருடங்கள் 15 வருடங்கள் என்று கிரயதொகை நிச்சயித்து அதனை மாதந்தோறும் செலுத்துவதற்கு லெட்டர் கொடுத்து இருக்கும் குடிசைமாற்று வாரியம்.

10) பெரும்பாலும் இந்த மாத தவணை தொகை ரூபாய் 100 க்கு கீழேதான் நிர்ணயக்கபட்டு இருக்கும்.1990 களில் கொடுக்கபட்ட ஒதுக்கீடுகளுக்கு மாத தவணை 12 ரூபாய் 15ரூபாய் என்று ஒதுக்கீடு கடிதங்களில்  குடிசைமாற்று வாரியம் கொடுத்து இருக்கும்.

11) மேற்படி குடிசைமாற்று வீட்டுவசதி திட்டங்கள் பெரும்பாலும் உலக வங்கி மூலம் கடன் பெற்று கட்டுவதால் அந்த தவணை தொகை வசூலிக்கபடுவதாக சொல்கிறார்கள்.

12) மேற்படி குடிசைமாற்று வாரிய சொத்துகளை வாங்குவதாக இருந்தால் விற்பனையாளர் முதன்முதலில் மனை/வீடு ஒதுக்கீடு பெற்றவரா என்று பார்க்க வேண்டும்.

13) ஒதுக்கீடு பெற்றவர் தான் என்று தெரிந்தால் வாரியத்திற்கு கட்ட வேண்டிய தவணை தொகை முழுவதும் கட்டிவிட்டு அரசிடம் இருந்து கிரயபத்திரம் மூலம் சொத்தை முழுமையாக பெற்று விட்டாரா என்று பார்க்க வேண்டும். கிரயபத்திரம் பெற்றுவிட்டார் என்றால் அப்படிபட்ட நபரிடம் தாராளமாக கிரயம் வாங்கலாம்.

14) அரசுக்கு கட்ட வேண்டிய தவணை கட்டாமல் நிலுவையில் வைத்து இருந்தால் சொத்தை வாங்குபவர் முதலில் ஒதுக்கீட்டு தாரரை அரசுக்கு கட்டவேண்டிய பாக்கியை கட்டி ஒதுக்கீடு தாரர் பெயரில் கிரயபத்திரம் போட வைக்க வேண்டும். அதன் பிறகுதான் சொத்தை வாங்க விரும்புபவர் தன் பெயருக்கு கிரயபத்திரம் எழுதிகொள்ள வேண்டும்.

15) அடுத்து ஒரு ரகம் இருக்கிறது குடிசைமாற்று வாரிய வீட்டின்/நிலத்தன் பயனாளிகளும் மேற்படி தொகையை ஒழுங்காக கட்ட மாட்டார்கள் .பல ஆண்டுகள் கட்டாமல் அப்படியே நிலுவையில் வைத்து இருப்பார்கள்.அப்படி இருக்கும் நிலையிலேயே பயனாளிகள் வேறு நபர்களுக்கு விற்றுவிடுவார்கள். பத்திர ஆபிஸில் சென்று எல்லாம் விற்பனையை பதிவு செய்ய மாட்டார்கள். சாதாரணமாக பதிவு செய்யபடாத கிரயபத்திரம் எழுதி விற்று இருப்பார்கள்.

16) மேற்படி வீடுகளை வாங்க விரும்பினால் ஒதுக்கீடுதாரர் ஒருவர் அனுபவதாரர் ஒருவர் என்று இருக்கும் முடிந்தால் ஒதுக்கீடு தாரரை தேடி கண்டுபிடித்து குடிசைமாற்று வாரியத்திடம் முழுதொகை கட்டி கிரயபத்திரம் ஒதுக்கீடுதாரர் பெயரில் பெற்று நீங்கள் வாங்கி கொள்ளலாம்.

17) ஒதுக்கீடுதாரரே யாரென்று தெரியவில்லை பல வருஷம் ஆயிற்று. எங்கே போனார்கள் என்று தெரியவில்லை என்றால் அனுபவதாரர் பல ஆண்டுகாளாக அனுபவிக்கறீர்கள் என்றால் குடிசைமாற்று வாரிய தலைவரிடம் Innocent Buyer அதாவது தெரியாமல் வாங்கிவிட்டேன் என்று மனு செய்து நாலு பெரிய மனிதர்களை பிடித்து அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைகளை எல்லாம் கட்டி கிரயபத்திரம் பெற்று கொண்டு அதனை அடுத்து வேறு நபர் வாங்கலாம்.

18) மேற்படி பதிவு செய்யபடாத விற்பனை ஒதுக்கீடுதாரர் ஒருவர் அனுபவதாரர் ஒருவர் அது மேலும் மேலும் கைமாறி வேறு ஓரு அனுபவதாரரிடம் இருக்கின்ற நிலைகள் எல்லாம் 2000 ஆண்டுகள் முன் உள்ள குடிசைமாற்று வாரிய வீடுகளில் நிறைய நடந்தது.

19) 2000 ஆண்டிற்கு பிறகு உருவான குடிசைமாற்று வாரிய வீடுகளை பயனாளிகள் அடுத்தவருக்கு விற்பனை செய்வதை குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் தடுக்க ஆரம்பித்தனர்.பயனாளிகளுக்கு கொடுக்கப்படும் ஒதுக்கீடு தற்காலிகமானது என்றும் விதிகள் மீறினால் மாத தவணை கட்டாமல் அருந்தால் வேறு யாருக்காவது பதிவு செய்யாமல் விற்பனை செய்தால் ஒதுக்கீட்டை இரத்து செய்வோம் என்று அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.அதனால் பழைய அனுபவதாரர் வேறு ஒதுகீடுதாரர் சிக்கல்கள் இல்லை.

20) எப்பொழுது குடிசைமாற்று வாரிய சொத்தை வாங்க விரும்பினாலும் முதலில் சம்மந்தபட்ட குடிசைமாற்று வாரிய அலுவலகத்திற்கு சென்று தீர விசாரித்து முடிவு எடுப்பது நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *