நீங்கள் சொத்து வாங்கும் நபரிடம் பத்திரம் இல்லாமல் வெறும் பட்டா மட்டும் இருக்கிறதா அவருக்கு சொத்து எப்படி வந்திருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog)

நீங்கள் வாங்க போகும் சொத்தை விற்பவர் தன்னிடம் எந்த வித கிரய பத்திரங்களோ, தாய் பத்திரங்களோ இல்லை என்று சொல்கிறார். ஆனால் அவரிடம் பட்டா மட்டும் இருக்கிறது, அந்த பட்டாப்படி உள்ள உரிமையை வைத்து விற்பதற்காக உங்களிடம் வருகிறார். அப்பொழுது உங்கள் மனதில் உடனடியாக தோன்றக் கூடிய விஷயம் என்னவென்றால் இவருக்கு என்ன வகையில் அரசிடம் இருந்து பட்டா கிடைத்திருக்கும் என்று உங்கள் ஆழ் மனதில் கேள்விகள் எழும்பிவிட வேண்டும்.

செட்டில் மெண்டு காலத்திலேயே விற்பவருடைய தாத்தாவிற்கோ அல்லது மூதாதையருக்கோ செட்டில்மெண்ட் பட்டா வந்திருக்கும் அதன் பிறகு நில உடமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (யு.டி.ஆர்) பட்டாவிலும் அவர்கள் பெயர் தொடர்ந்து வந்திருக்கும்.

அடுத்தாக செட்டில்மெண்ட் காலத்திலேயே இடங்கள்தரிசு என்று வகைப்படுத்தி உரிமையாளர்கள்யாரும் இல்லாத நிலையில் இருந்திருக்கும். 1970-களில் அந்த நிலங்கள் தற்போது சொத்து விற்பவருடைய மூதாதையர்களுக்கு இலவசமாக கொடுத்திருப்பார்கள். அதன் பிறகு நில உடமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (யு.டி.ஆர்) பட்டாவிலும் அவர்கள் பெயர் தொடர்ந்து வந்திருக்கும்.

நில உடமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1985-களில் புறம்போக்கு என்று வகைப்படுத்தி இருந்த நிலங்களை எல்லாம் இலவச ஒப்படைபட்டா மூலம் 1990-களுக்கு பிறகு மொழி போராட்ட தியாகிகள், சுதந்திர போராட்ட தியாகிகள் முன்னாள் இராணுவத்தினர், நலிந்தோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர்ஆகியோருக்கு ஒப்படைத்து இருப்பார்கள்.

அதிகமாக நிலங்கள் வைத்திருக்க கூடாது அதனை கட்டுபடுத்துவதற்காக நில உச்சவரம்பு சட்டம் போடப்பட்டது. அந்த சட்டத்தின் படி தனியார்கள் வரம்பிற்கு மீறிவைத்துள்ள மிகை நிலங்களை அரசுகையகப்படுத்தி ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் என்று பிரித்து அந்த பகுதியில் நிலம் அற்றவர்களுக்கு ஒப்படைத்து பட்டா வழங்கி இருப்பார்கள்.

அதே போல நகரபகுதிகளில் அதிகமாக நிலங்கள் வைத்திருக்கின்றவர்களை நகர்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் மிகை நிலங்களைஅரசு கையகப்படுத்திஅதனை 5 செண்டு, 3 செண்டு என்று சிறு சிறு மனைகளாக பிரித்து நிலம் அற்றவர்களுக்கு ஒப்படைத்து பட்டா வழங்கி இருப்பார்கள்.

அரசினுடைய நத்தம் புறம்போக்கு நிலமாக இருந்தால் நத்தம் நிலவரி திட்டத்தின் படி சர்வே செய்து தோராயபட்டா, நத்தம் நிலவரி திட்டம் தூயபட்டா, நத்தம் மனைவரி பட்டா என்று அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்கு பட்டா மூலம் நிலங்களை ஒப்படைத்திருப்பார்கள்.

1995-க்கு பிறகு நத்தம் அல்லாத பிற அரசு புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு புறம்போக்கு நிலங்களின் மீதான நீண்ட நாள் அனுபவத்தைக் கொண்டு ‘ஒன்டைம் செட்டில்மெண்ட் பட்டா’| என்ற திட்டத்தின் படிஅரசு நிலங்களை ஒப்படைத்து பட்டா கொடுத்திருக்கும்.

ஆக நிலத்தை விற்பவருக்கு பத்திரம் இல்லாமல் பட்டா மூலமாக சொத்து வந்திருந்ததென்றால் மேற்சொன்ன செய்திகளை எல்லாம்  ஒப்புமைப்படுத்தி பார்த்து அவரிடம் இருந்து நிலத்தை வாங்குவது புத்திசாலித் தனமான செயலாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *