நீங்கள் சொத்து வாங்கும் போது விற்பவரிடம் இருந்து வாங்குகின்ற தாய் பத்திரங்களுக்கு தனி ஜாபிதா போட வேண்டும். ஏன்???

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog.)

நீங்கள் ஒரு சொத்தை கிரயம் வாங்க பத்திர அலுவலகத்தில் கிரயம் செய்யும் பொழுது சொத்தை விற்பவர் அந்த சொத்திற்கு உண்டான அனைத்து தாய்பத்திரங்களின் ஒரிஜினல் அல்லது அதனுடைய நகல்களை உங்களுக்கு ஒப்படைப்பார்.

அதே போல பழைய பட்டாக்களை செட்டில்மெண்ட் ஆவணங்களை அந்த சொத்தின் புல வரைபடங்களை அந்த சொத்தின் வருவாய்துறை ஆவணங்களான அ-பதிவேடு, சிட்டா, அடங்கள் போன்ற ஆவணங்களை நீண்ட காலங்களாக போட்டு வைத்திருக்கின்ற ஈசிக்களை ஏதாவது நீதிமன்ற சிக்கல் இருந்தால் நீதிமன்ற டிகிரிக்களை வங்கியிலோ, அரசிடமோ இருந்து ஏலத்தில் எடுத்திருந்தால் அது சம்மந்தப்பட்ட விற்பனை சான்றிதழை எல்லாம் உங்களிடம் ஒப்படைப்பார்.

மேலும் நிலத்தின் கிஸ்தி, கந்தாய இரசீதுகளை, வீட்டு வாடகை மற்றும் கரண்டு பில் இரசீதுகளை, மின்சாரகணக்கு அட்டைகளை, நிலத்திற்கு அரசு எதாவது மானியங்கள் மூலம் கிணறு போன்றவற்றை வெட்டிக் கொடுத்திருந்தால் அதனுடைய ஆவணங்களை எல்லாம் உங்களிடம் ஒப்படைப்பார். மேற்படி ஆவணங்களில் சில ஒரிஜினல்கள் ஆகவும், சில நகல்களாகவும் கூட இருக்கும். சில தாய்பத்திரங்கள் காப்பி ஆப் த (of)டாக்குமெண்ட் ஆக கூட இருக்கும்.

கிரயத்தின் போது நீங்கள் உருவாக்குகின்ற பத்திரத்தில் ஒரு ஷரத்தில் உங்களிடம் இருந்து அசல் மற்றும் நகல் மூல ஆவணங்களை பெற்றுக் கொண்டேன் என்று உறுதி கொடுத்திருப்பார். அதற்கு மேல் அந்த ஷரத்தில் எந்தெந்த ஆவணங்கள் எல்லாம் மூல ஆவணங்களாக வாங்கினேன் என்ற விவரங்கள் எல்லாம் தெளிவாகவும், முழுமையாகவும், விவரமாகவும் இருக்காது. அசல் மற்றும் நகல் அனைத்து ஆவணங்களையும் பெற்று கொண்டேன் என்ற ஷரத்துலேயே அனைத்து கதைகளையும் முடித்து விடுவார்கள்.

சொத்து வாங்குகின்ற நீங்களும் அன்று நடக்கின்ற கிரய பத்திரத்தில் உங்களுக்கு வருகின்ற பத்திரத்தை பற்றியும், பணப்பரிமாற்றங்களை பற்றியுமே அதிக கவனம் செலுத்துவதனால் தாய்பத்திரங்கள் சம்மந்தப்பட்ட விஷயங்களில் பெருமளவில் அக்கறை எடுத்து கொள்ளமாட்டீர்கள். கிரயம் எல்லாம் முடிந்த பிறகு சில மாதங்களோ, சில வருடங்களோ கழித்து நீங்கள் அந்த சொத்தை வைத்து வங்கிகடனுக்கோ, கட்டிட அனுமதிக்கோ அல்லது வேறு ஏதாவது வேலைகளுக்கோ செல்லும் போது தாய் பத்திரங்களில் அந்த ஆவணம் இல்லை, இந்த ஆவணம் இல்லை என்று உங்களை பதங்குலைய வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

அப்பொழுது தான் மீண்டும் நீங்கள் சொத்தை விற்றவரை தேடி ஓடுவீர்கள். அதுவரை உங்களுக்கு எளிமையாக கிடைத்த நபர், எளிதில் போனில் பிடிக்கக் கூடிய நபராக இருந்தவர் தற்பொழுது நேரிலும், போனிலும் பிடிக்க முடியாமல் உங்களை அலைய வைத்துக் கொண்டு இருப்பார்.

அப்படி அலைந்து திரிந்து அவரை பிடித்தாலும், அவர் உங்களுக்காக மெனக்கெட்டு தாய் பத்திரங்களை தேடி கொடுப்பதற்கு பல வெட்டி பந்தாக்களை காட்டிக் கொண்டு இருப்பார்.

மேலும் நான் கிரய ப்பத்திரம் எழுதிய அன்றைக்கே அனைத்து அசல் நகல்களையும் ஒப்படைத்து விட்டேனே என்று உங்கள் மீது ஒரு சின்ன இடியையும் தூக்கி போடுவார். அதன் பிறகு மேற்படி தவறி போன தாய் பத்திரங்களுக்காகவோ, ஆவணங்களுக்காகவோ நீங்கள் கைக்காசு கொடுத்து தேடு கூலி செலவழித்து நீங்களே உங்களுடைய ஆவணங்களை தேடி கண்டுபிடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இதனால் உங்களுக்கு நேரமும், பணமும், மனஉலைச்சலும் கூடுதலாகவே இருக்கும்.

எனவே கிரய பத்திரம் போடும் பொழுது அசல் நகல் பத்திரங்களை சொத்து விற்பவரிடமிருந்து சொத்து வாங்குபவர் பெற்றுக் கொண்டதற்காக தனியாக ஒரு உறுதி மொழி பத்திரம் எழுதி கொள்வது மிகவும் நல்லது. மேற்படி உறுதி மொழி பத்திரத்தில் ஒரு ஜாபிதாவை உருவாக்கி ஜாபிதா என்றால் வேறொன்றும் அல்ல அது ஒரு பட்டியல் ஆகும்.

அந்த ஜாபிதாவில் வரிசை எண். ஆவண எண், ஆவண தேதி, அதனுடைய விவரம், அது அசலா நகலா, வேரு ஏதாவது குறிப்புகள், கொடுத்து விட்டாரா, கொடுக்கவில்லையா? என்று அட்டவணை தளங்களை உருவாக்கி 10 ஆவணங்களோ, 15 ஆவணங்களோ இருந்தால் அதனை ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதி அந்த ஜாபிதாவை உருவாக்குதல் வேண்டும். மேற்படி ஜாபிதாவில் ஒரு சின்ன கிஸ்தி இரசீது விவரங்களை கூட அது 10 கிஸ்தி இரசீதுகளுக்கு மேல் இருந்தாலும் ஒன்று விடாமல் அனைத்து இரசீதுகளையும் ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதி சொத்து விற்பவரிடம் அவர் கொடுத்து விட்டதாகவும், சொத்து வாங்குபவர் அனைத்தையும் பெற்றுக் கொண்டதாகவும் உறுதிமொழி கொடுத்து அந்த ஜாபிதா பத்திரத்தை உருவாக்க வேண்டும்.

இப்படி தாய் பத்திரங்களின் ஜாபிதா உறுதிமொழி இரசீதை இப்பொழுது இருக்கின்ற ஆவண எழுத்தர்களும் சரி, வழக்கறிஞர்களும் சரி எங்குமே போடுவதில்லை, அதற்கு முக்கியதுவம் கொடுப்பதில்லை அல்லது இப்படி ஒரு ஜாபிதா போடத் தெரியாமலேயே தொழில் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இப்படி ஜாபிதா போடுவதால் கிரயபத்திரத்திற்கு பிறகு தாய்பத்திரங்களினால் உண்டாகின்ற பல தலைவலிகள் சொத்துக்கள் வாங்குபவர்களுக்கு குறையும், என்னென்ன ஆவணகள் பெற்றுக் கொண்டோம் என்று இரசீது இருப்பதால் எதிர்காலத்தில் வேறு எதாவது ஆவணங்கள் தேவைப்பட்டால் சொத்து விற்றவர் ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்து விட்டேன் என்று மறுக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *